search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் சோதனை ஓட்டம்
    X

    ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட காட்சி.

    நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் சோதனை ஓட்டம்

    • தற்போது ரெயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நெல்லை இருந்து திருச்செந்தூர் செல்ல 2 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நெல்லை-திருச்செந்தூர் ரெயில் தண்டவாளத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது.

    அந்த சமயம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் 800-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இதற்கிடையில் சேதமடைந்த ரெயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் டீசல் என்ஜின் மூலம் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ரெயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மாலை நெல்லையில் இருந்து ஒரு டீசல் என்ஜின் மட்டும் திருச்செந்தூர் நோக்கி சோதனை ஓட்டம் சென்றது.

    இந்த சோதனை ஓட்டத்தில் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும், ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

    நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதையில் இன்று வரை ரயில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சோதனை ஓட்டம் நடந்துள்ளது. நாளை (6-ந்தேதி) முதல் பயணிகள் ரெயிலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது சோதனை ஓட்டத்தில் ரெயில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை வருவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது டீசல் என்ஜின் மூலம் தான் இந்த ரெயில் இயங்குகிறது. தற்போது வரை இந்த வழித்தடத்தில் மின்சார ரெயிலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே நாளை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் மட்டும் இயங்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் டீசல் என்ஜின் மூலமாகவா அல்லது மின்சாரம் மூலமாகவா என்பது தற்போது வரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் ரெயில் தண்டவாளம் சேதமடைந்த இடங்களில் ரெயில் செல்லும்போது 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்கப்படும் என்றும் தெரிகிறது.

    எனவே நெல்லை இருந்து திருச்செந்தூர் செல்ல 2 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மின்சார ரெயில் மூலம் செல்லும்போது 1 மணி நேரம் 10 நிமிடங்களில் ரெயில் திருச்செந்தூரை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×