search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக இருக்கிறது: பிரதமர் மோடி
    X

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக இருக்கிறது: பிரதமர் மோடி

    • 21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.
    • தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். சென்னையில் நேற்று அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பிரதமர் மோடி வேலூரில் பிரசாரம் செய்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வேலூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம், திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், நரசிம்மன் (கிருஷ்ணகிரி), பா.ம.க. வேட்பாளர்கள் சவுமியா அன்புமணி (தர்மபுரி), வக்கீல் பாலு (அரக்கோணம்), கணேஷ் குமார் (ஆரணி) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இதற்காக பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அங்கிருந்து காரில் கோட்டை மைதானத்திற்கு வந்தார். கோட்டை முன்பு அண்ணாசாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி கோஷம் எழுப்பியபடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வேட்டி, சட்டை அணிந்து மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

    பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர். பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் செங்கோலை பரிசாக வழங்கினார்கள்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நான் உங்களிடம் தமிழில் பேசாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

    வர இருக்கிற தமிழ் புத்தாண்டு தினத்திற்கு எனது வாழ்த்துகளை உங்கள் அத்தனை பேருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டு நமது அனைவருக்கும் வளர்ச்சி மிகுந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.

    உங்களுடைய அன்பு, ஆசீர்வாதம் எனக்கு தெரிகிறது. எனவே தமிழக மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து எனது முழு திறமையையும் வெளிபடுத்துவேன். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப் போவதை டெல்லி உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்.

    இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்ததை போல் மீண்டும் ஒரு வரலாறு நிகழ உள்ளது. வீரம் நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரரர், கடவுள் முருகப் பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன்.

    2014-ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை. எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.

    21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். உலக அரங்கில் இந்தியா இன்று வலிமையான நாடாக பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது.

    இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது.

    வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். சென்னை, பெங்களூரு தொழில் துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் தி.மு.க. அரசியல் செய்கிறது.

    தி.மு.க. ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. கொள்ளையடிப்பதிலும், ஊழலுக்கும் தி.மு.க. காப்பிரைட் வைத்துள்ளது.

    மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை தி.மு.க. ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த அதிகார மையமாக தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. பழைய சிந்தனையிலேயே உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×