search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குளம், குட்டைகள் வறண்டது- வனப்பகுதியில் இருந்து குடிநீர் தேடி வெளியேறும் வன விலங்குகள்
    X

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குளம், குட்டைகள் வறண்டது- வனப்பகுதியில் இருந்து குடிநீர் தேடி வெளியேறும் வன விலங்குகள்

    • தண்ணீர் தேடி யானைகள், சிறுத்தை, மான் என வன விலங்குகள் அடிக்கடி வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    • விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து செல்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பர்கூர் மலைப்பகுதி, சென்னிமலை மலை என பல்வேறு இடங்களில் வனப்பகுதிகள் காணப்படுகிறது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மட்டும் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள், புலிகள், சிறுத்தை, மான் கூட்டம் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் வசித்து வருகின்றன. அதோடு இல்லாமல் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்களும் அதிக அளவில் உள்ளன.

    திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இருமார்க்கமாக வந்து செல்கின்றன. வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் ஏராளமான குளம், குட்டைகள் உள்ளன.

    மழை காலங்களில் பொழியும் மழையால் இந்த குளம், குட்டைகள் நிரம்பி காணப்பட்டது. மேலும் வனப்பகுதிகளும் பசுமையாக மாறியது. இதனால் வனவிலங்குகள் குளம், குட்டைகளில் தண்ணீர் குடித்து அடர்ந்த வனப்பகுதியிலேயே சுற்றி வந்தது. ஆனால் ஒரு சில யானைகள் கரும்புக்காக அடிக்கடி சாலையில் உலாவிக் கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் மழை இல்லாமல் வனப்பகுதி முழுவதும் வெயில் காரணமாக பசுமை இழந்து காணப்படுகிறது. மரம், செடி, கொடிகளில் இலைகள் உதிர்ந்து சருகுகளாக மாறிவிட்டது. மேலும் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளும் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டது. கோடை காலம் தொடங்கும் முன்பே வனப்பகுதிகளில் வறட்சியின் தாண்டவம் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக அடிக்கடி வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 முதல் 15 ஏக்கர் வரை வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எரிந்து சேதமாகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளும் இடம் பெயர்ந்து வருகிறது.

    வனவிலங்குகள் குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து வருகிறது. மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கும் செல்ல தொடங்கி விட்டது. தெங்குமரகடா அருகில் உள்ள மாயாற்றுக்கு அதிக அளவில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க செல்ல தொடங்கிவிட்டது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் மாயாற்று பகுதியில் அதிக அளவில் உள்ளது.

    பண்ணாரி பகுதியில் இரவு நேரங்களில் யானை, மான் கூட்டங்கள் தண்ணீர் தேடி ரோட்டில் சுற்றி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பவானிசாகர் நீர்தேக்க பகுதி மற்றும் வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் நீர் தேக்க பகுதிகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து விட்டு கும்மாளமிட்டு செல்கிறது.

    இதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர் மற்றும் சென்னிமலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து ரம்மியாக காட்சி அளித்தது.

    இந்த நிலையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.

    இதனால் தண்ணீர் தேடி யானைகள், சிறுத்தை, மான் என வன விலங்குகள் அடிக்கடி வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் வனப்பகுதி ரோட்டில் வரும் வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டுவது வாடிக்கையாகி விட்டது.

    மேலும் வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் காரண மாக மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளது. இதனால் சென்னிமலை உள்பட ஒரு சில வனப்பகுதிகளில் தீ பற்றி எரியும் சம்பவங்களும் நடக்கிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட வனத்துறையினர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல்வேறு விலங்குகள் இருந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் வனப்பகுதிகள் வறட்சியாக காணப்படுகிறது. மேலும் குளம், குட்டைகள் வறண்டு வரும் நிலை உள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து செல்கிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் ரோட்டில் உலா வரும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது.

    இதேபோல் வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து வருவதால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் பீடி, சிகரெட்டுகளை புகைத்து விட்டு நெருப்புடன் அப்படியே வீசி செல்ல கூடாது. இதனால் பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×