என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
- கவுண்டம்பாளையம் பகுதியில் 40 குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
- எங்களிடம் முக்கால் அடி முதல் மண்பானைகள் உள்ளன.
கவுண்டம்பாளையம்:
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன.
இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வர்ணம் பூசுவது, பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதிற்கு தயாராகி வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகையில் முக்கியம் வகிப்பது, மண்பானை தான். மண்பானை பயன்பாடு குறைந்திருந்தாலும், பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை மண்பாண்டம் தான் பிடிக்கிறது. ஏனென்றால் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பொங்கல் அன்று மண்பானையில் பொங்கல் வைப்பது தொடர்ந்து வருகிறது.
பித்தளை, சில்வர் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் தற்போது இருந்தாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கமானது இருந்து தான் வருகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், பொங்கலிடுவதற்கு பயன்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி கோவை கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்திலேயே தொழிலாளர்கள் தொடங்கி விட்டனர்.
இருந்தபோதிலும் மாவட்டத்தில் பெய்த பருவமழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மண்பானை தயாரிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
ஒரு அடி முதல் பெரிய அளவிலான மண்பானைகள் வரை என சிறியதும், பெரியதுமாக மண்பானைகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகிறார்கள்.
இந்த பானைகள் தயாரிக்கப்பட்டு, கோவை மட்டுமின்றி பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தாங்கள் தயாரிக்கும் பானைகளை ரூ.70-ல் இருந்து ரூ.100 வரைக்கு விற்பனை செய்கின்றனர்.
இவர்களிடம் வாங்கி செல்லும் வியாபாரிகள் அதனை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
மண்பானைகள் தயாரிப்பு ஒருபுறம் மும்முரமாக நடந்து வந்தாலும், மண்பானை தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான மண் கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மண்பானை தொழிலாளர் வெங்கடாஜலம் என்பவர் கூறியதாவது:-
கவுண்டம்பாளையம் பகுதியில் 40 குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் மண்பானை தயாரிப்பதற்கு மாங்கரை, கணுவாய், தடகாம் உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து தொழிலில் ஈடுபட்டு வந்தோம்.
ஆனால் தற்போது எங்களுக்கு மண்பானை செய்வதற்கு தேவையான மண் கிடைப்பதில்லை. இதனால், நாங்கள் தற்போது வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது வரும் மண்ணை விலைக்கு வாங்கி மண்பானை செய்து வருகிறோம்.
இந்த மணலில் மண்பானை செய்வது மிகவும் சிரமம். வேறுவழியின்றி இதனை செய்து வருகிறோம். இந்த மண்ணும் ஒரு மூட்டை ரூ.5100-ல் இருந்து ரூ.5400 வரை விற்கப்படுகிறது. ஒரு லோடு என்றால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் ஆகிறது.
அப்படி வாங்கி தான் நாங்கள் மண்பானை செய்து வருகிறோம். எங்களிடம் முக்கால் அடி முதல் மண்பானைகள் உள்ளன. இந்த பானைகளை ரூ.70-ல் இருந்து ரூ.100 வரை விற்பனை செய்து வருகிறோம்.
தொழிலுக்கு தேவையான மண் கிடைப்பதிலும், வாங்குவதிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது பொங்கலுக்கான பானைகள் தயாரித்து வருகிறோம்.
இந்த தொழிலுக்கு தேவையான மண் மற்றும் அரவை எந்திரம், கலவை எந்திரங்களை அளித்து, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்