search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் வினியோகம் தொடங்கியது
    X

    ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: "டோக்கன்" வினியோகம் தொடங்கியது

    • பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையை காண்பித்து டோக்கனை பெற்றுக்கொண்டனர்.
    • பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லாத அட்டைதாரர்கள் ஆகியோரை தவிர்த்து மற்ற ரேஷன்கார்டு தாரர்கள் அனைவருக்கும் பொங்கலுக்கு முன்பே ரூ.1000 ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    ரேஷன்கார்டுகள் பொங்கல் தொகுப்பை வாங்குவதற்காக பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அதன்மூலமாக பொங்கல் தொகுப்பை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி தமிழகம் முழுவதும் இன்று வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. வீடு வீடாக இந்த டோக்கன் வழங்கப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

    பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையை காண்பித்து டோக்கனை பெற்றுக்கொண்டனர். டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், எந்த தேதியில் பொருட்களை வாங்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் 3 நாட்கள் வருகிற 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன்பின்னர் வருகிற 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை டோக்கன் வரிசை மற்றும் நாள்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த 3 நாட்களில் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான அடுத்த ஞாயிற்றுக்கிழமை (14-ந்தேதி) பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    எனவே பொதுமக்கள் கூட்டமாக ரேஷன் கடைகளில் கூட வேண்டாம் என்றும் தங்களது டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    Next Story
    ×