search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகிறது
    X

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகிறது

    • தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்கா தவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்பு படை குழு வருகை தர உள்ளது.

    Next Story
    ×