search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ஜினீயரிங் கல்லூரிகள் போலி கணக்கு: உயர்கல்வித்துறை விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு
    X

    என்ஜினீயரிங் கல்லூரிகள் போலி கணக்கு: உயர்கல்வித்துறை விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு

    • ஒரு பேராசிரியர் அதிகபட்சமாக 11 கல்லூரிகள் வரை பணியில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
    • முதல்கட்ட அறிக்கை அண்ணாபல்கலைக்கழகம் தரப்பில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சமர்பிக்கப்பட்டது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்களை போலியாக பணியில் சேர்த்து கணக்கு காட்டிய விவகாரத்தில் ஒரு பேராசிரியர் 22 கல்லூரிகளில் பணியாற்றியதாக விசாரணையில் பதிவுகள் பெறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை அறிக்கை, விரைவில் கவர்னர் மற்றும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளில் 340 பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்ததும், அங்கீகாரம் பெறுவதற்காக ஆய்வின் போது இதுபோன்ற விஷயங்களில் கல்லூரிகள் ஈடுபட்டதும் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    ஒரு பேராசிரியர் அதிகபட்சமாக 11 கல்லூரிகள் வரை பணியில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த முறைகேடு தொடர்பாக, பல்கலைக்கழக வேந்தரும் கவர்னருமான ஆர்.என்.ரவி, அண்ணாபல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.

    இதுதொடர்பான, முதல்கட்ட அறிக்கை அண்ணாபல்கலைக்கழகம் தரப்பில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த சூழலில், பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை தமிழக உயர்கல்வித்துறை அமைத்தது. இந்த குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடமும், கல்லூரிகளிடம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இணைப்பு அங்கீகாரம் பெற போலியாக கணக்கு காட்டப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஒரு பேராசிரியர் 22 கல்லூரிகளில் முழுநேர பேராசிரியராக பணியாற்றியதாக பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகள் விளக்கம் அளிப்பதற்காக கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

    இந்த விளக்கத்தின் அடிப்படையில் தவறு செய்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யவோ, குறிப்பிட்ட காலத்திற்கு மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கவோ, கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவோ திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் விசாரணை அறிக்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசிடமும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×