search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கல்குவாரி டெண்டர் விவகாரத்தில் அரசு ஊழியர்களை தாக்கிய தி.மு.க.வை சேர்ந்த 13 பேர் கைது
    X

    கல்குவாரி டெண்டர் விவகாரத்தில் அரசு ஊழியர்களை தாக்கிய தி.மு.க.வை சேர்ந்த 13 பேர் கைது

    • கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    • எஸ்.பி. ஷ்யாமளாதேவி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை ஏலம் விடுவதாக, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். இந்த பெட்டி, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) திறக்கப்பட்டு ஏலம் எடுத்த நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களை குவிந்தனர்.

    அப்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த, பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48), பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது, அங்கிருந்த சிலர் அவர்களை வழிமறித்து விண்ணப்பத்தை போடவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

    ஆனாலும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அதை கேட்காமல் உள்ளே சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து முகத்தில் துண்டு அணிந்து மறைத்து கொண்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் கலைச்செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெறியப்பட்டது. டெண்டர் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

    இந்த தாக்குதலை தடுக்க வந்த கனிம வளத்துறை அதிகாரி, அரசு அலுவலர்கள், பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். அலுவலகம் சூறையாடப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன.

    இதனால் கலெக்டர் அலுவலக முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294, 323, 506(2), பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவிக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து எஸ்.பி. ஷ்யாமளாதேவி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர், ஒகளூர் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒகளூர் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கலையரசியின் கணவர் கொடியரசன், பெரம்பலூர், கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன், பெரம்பலூர், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த லெனின், பெரம்பலூர், புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, அரியலூர் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ், செந்துறை அருகே உள்ள சேடக்குடி க்காடு செல்வம், இளங்கண்ணன் செந்துறை அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, செந்துறையை சேர்ந்த மாரிமுத்து உட்பட 13 பேரை பெரம்பலூர் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருவதால் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

    Next Story
    ×