search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை வெப்பத்தை தணித்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    கோடை வெப்பத்தை தணித்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

    • கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
    • அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.

    அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×