என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
- கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை.
- ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்பஸ் (Conocarpus) என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள், கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.
தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்த சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின் சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை. ஆனால், இது குறித்த உண்மைகள் எதுவும் தெரியாமல் இந்த வகை மரங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.
கோனாகார்பஸ் மரங்களின் தீமைகள் குறித்தும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் சுற்றுச்சூழலுக்கும், மனித நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவித்து விடும்.
எனவே தமிழ்நாட்டில் கோனாகார்பஸ் மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி, மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்