search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழை சிதைவில் இருந்து மீட்கும் வரை எனது பயணம் தொடரும்- ராமதாஸ் அறிக்கை
    X

    தமிழை சிதைவில் இருந்து மீட்கும் வரை எனது பயணம் தொடரும்- ராமதாஸ் அறிக்கை

    • அன்னைத் தமிழ் மொழியின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகம்.
    • எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்கை எட்டுவது அரசின் கைகளில் மட்டும் இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் அன்னைத் தமிழைக் காக்கும் நோக்கத்துடன், 'தமிழைத் தேடி...' என்ற தலைப்பில் சென்னை முதல் மதுரை வரை நான் மேற்கொண்ட விழிப்புணர்வு பரப்புரை பயணம் மதுரையில் நேற்று (நேற்று முன்தினம்) வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த பயணம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதற்காக தமிழக மக்களுக்கு நான் எனது நன்றிகளை அடிமனதின் ஆழத்தில் இருந்து வெளிப்படுத்துகிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழி வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழ் மொழியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இது தொடர்பாக துண்டறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, வணிகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழைத் தேடி பரப்புரை பயணத்தால் ஏற்பட்டுள்ள நல்மாற்றம். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

    ஆனால், அன்னைத் தமிழ் மொழியின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகம். பிறமொழி கலப்பு என்ற 1,000 ஆண்டு கால சீரழிவை ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிட முடியாது. அதனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அன்னைத் தமிழை சிதைவில் இருந்து மீட்டெடுக்கும் வரை தமிழைத் தேடிய எனது பயணம் தொடரும். 'தமிழைத் தேடி...' என்பது விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் மட்டுமல்ல, அது ஓர் இயக்கம். இந்த இயக்கம் தமிழ் காக்கும் பணிகளை தொடரும்.

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்கை எட்டுவது அரசின் கைகளில் மட்டும் இல்லை. தமிழறிஞர்களின் கைகளில் மட்டும் இல்லை. பொதுமக்களின் கைகளில் மட்டும் இல்லை. பள்ளிகளை நடத்துபவர்களின் கைகளில் மட்டும் இல்லை. இந்த நான்கு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் தனித்தமிழ் பயன்பாட்டை உறுதிசெய்ய முடியும்.

    அதற்காக தமிழ் கட்டாய பயிற்று மொழி சட்டம், தமிழ்மொழி பாதுகாப்பு சட்டம், தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க செய்தல், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், தமிழை சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அறிவித்தல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு, தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப்பாட மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழைத் தேடி பரப்புரை பயணத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல், பொதுமக்களும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து தமிழ் மொழியிலேயே பேசவும், எழுதவும் செய்ய வேண்டும். தமிழ் சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், தமிழ் கண்டிப்பாக அரியணையில் ஏறும். இதை உணர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×