search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலங்கள் மீட்பு
    X

    கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலங்கள் மீட்பு

    • நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் கோவில்களில் ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தற்போதைய கோவில் அறங்காவலர் ரூபாபாய் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×