search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் சுற்றிவரும் அரிசி கொம்பன்
    X

    கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் சுற்றிவரும் அரிசி கொம்பன்

    • ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
    • அரிசி கொம்பன் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் தேனி மாவட்டம் சின்னமனூர் ஹைவேலிஸ் பகுதிகளில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிசி கொம்பன் யானை, வனத்துறையின் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் விடப்பட்டுள்ளது.

    தற்போது காட்டுப்பகுதியில் அரிசி கொம்பன் சுதந்திரமாக சுற்றி வரும் நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் காதில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல்களை வைத்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் யானை செல்லும் பாதைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. யானையின் இருப்பிடம் தற்போது எங்கு உள்ளது? என்பது தெரியாமல் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. கன்னியாகுமரி பகுதியை நோக்கி அரிசி கொம்பன் செல்வதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டது.

    ஆனால் இதனை மறுத்த வனத்துறையினர், ரேடியோ காலர் சிக்னல் மீண்டும் கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது கிடைத்த தகவலின்படி அரிசி கொம்பன், கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் பகுதிகளில் தான் சுற்றி வருகிறது என்றனர். அப்பர் கோதையாறு, முத்துக்குழி வயல், குற்றியார் பகுதிகளில் இருக்கும் உணவை சாப்பிட்டும், தண்ணீர் அருந்தியவாறும் யானை உள்ளதாக அதனை கண்காணித்து வரும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டம் வனத்துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினரும், திருநெல்வேலி மாவட்ட வனத்துறையை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவும் தொடர்ந்து அரிசி கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×