search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்தது
    X

    தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்தது

    • ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக உற்பத்தியாகும் அளவைவிட இந்தாண்டு பாதி அளவு தான் உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது.
    • மழைநீர் வடிந்த பின்னர் உப்பு உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆகும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மாவட்டத்தில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இப்பகுதியில் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும். ஜூலை, ஆகஸ்ட், மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு மிகவும் உகந்த காலமாகும்.

    இந்நிலையில் இந்தாண்டு அவ்வப்போது பெய்த மழை மற்றும் சரியாக வீசாத மேல்திசை காற்று போன்ற காரணங்களால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    இந்தாண்டு ஆடி மாதம் தொடக்கமான ஜூலை 17-ந்தேதியில் இருந்தே அவ்வப்போது மழை பெய்துள்ளது. மேலும் ஆடி மாதத்தில் வழக்கமாக வீசும் மேல்திசை காற்றும் இந்தாண்டு சரியாக வீசவில்லை. இதனால் உப்பு உற்பத்தி சரியாக நடைபெறவில்லை.

    ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக உற்பத்தியாகும் அளவைவிட இந்தாண்டு பாதி அளவு தான் உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை 50 சதவீதம் அதாவது 12.5 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது.

    அக்டோபர் முதல் வாரம் அதாவது இன்னும் 5 வாரங்கள் தான் உப்பு உற்பத்திக்கான காலம் உள்ளது. தற்போது மழைநீர் உப்பளங்களில் தேங்கி உள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிந்த பின்னர் உப்பு உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆகும். உற்பத்தி குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை விலை போகிறது.

    நல்ல விலை இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆனால் பெரிய அளவில் லாபம் இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×