search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து தூது விடும் சசிகலா- 2 முன்னாள் அமைச்சர்கள் மூலம் காய் நகர்த்துகிறார்
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து தூது விடும் சசிகலா- 2 முன்னாள் அமைச்சர்கள் மூலம் காய் நகர்த்துகிறார்

    • அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார்.
    • வரும் காலங்களில் சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறுமா என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் நீடித்து வந்த தலைமை பதவிக்கான அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவர் ஏகமனதாக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டு கதவை தட்டிய ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. தலைமை விவகாரத்தில் சாதகமான அம்சங்கள் எதுவுமே நடைபெறவில்லை.

    தேர்தல் ஆணையத்தில் தொடங்கி கோர்ட்டு நடவடிக்கைகள் வரை அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்து உள்ளன. இப்படி அ.தி.மு.க.வில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    தேவைப்பட்டால் சசிகலாவையும் சந்திப்பேன் என்றும், அ.தி.மு.க.வை மீட்பதே எங்கள் லட்சியம் என்றும் கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். காய் நகர்த்தினார். அது எந்தவித தாக்கத்தையும் அ.தி.மு.க.வில் இதுவரை ஏற்படுத்தவில்லை.

    இதனை சசிகலாவும் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உடனடியாக ஓ.பி.எஸ்.சை சந்திக்க விரும்பாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கைப்பற்றியதை சசிகலா நன்கு உணர்ந்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் சசிகலாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்துள்ளார்.

    இதன் காரணமாகவே அவரை சசிகலா முதல்-அமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினார். தற்போது எடப்பாடி பழனிசாமி ஒரு சிலரை தவிர பிரிந்து சென்ற அனைவரும் அ.தி.மு.க.வில் வந்து சேரலாம் என்று கூறி வருகிறார்.

    இதுபற்றி அ.தி.மு.க. வினர் கூறும்போது, சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரையும் மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

    ஆனால் சசிகலாவோ இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து தூது விட்டுக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார். இதன் காரணமாகவே அவர் எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பேச்சு நடத்தி எப்படியும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட வேண்டும் என்று சசிகலா கணக்கு போட்டுள்ளார்.

    ஆனால் எடப்பாடியின் எண்ணமோ வேறு மாதிரியாக உள்ளது. சசிகலா குடும்பத்தினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் அவர்கள் சொல்கிறபடி தான் நாம் நடக்க வேண்டி இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

    அ.தி.மு.க.வில் உள்ள பெரும்பாலானோரின் எண்ணமும் இதுவாகவே உள்ளது. எனவே வரும் காலங்களில் சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறும் போது, தற்போதைய சூழலில் சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வுக்கு எந்தவித செல்வாக்கும் வந்துவிடப் போவதில்லை.

    எனவே எடப்பாடி பழனிசாமி தற்போது சசிகலாவின் இந்த தூது நடவடிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தமாட்டார். சசிகலா உள்ளிட்ட அவரது ஆட்கள் யாரை உள்ளே விட்டாலும் நமக்கு ஆபத்து என்பதை அவர் நிச்சயம் உணர்ந்துள்ளார். எனவே அது போன்று நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமியால் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×