search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாத்தான்குளம் கொலை வழக்கு: தந்தை-மகனின் ரத்தம் படிந்த துணிகளை குப்பை தொட்டியில் போலீசார் வீசினர்
    X

    பென்னிக்ஸ் - ஜெயராஜ்

    சாத்தான்குளம் கொலை வழக்கு: தந்தை-மகனின் ரத்தம் படிந்த துணிகளை குப்பை தொட்டியில் போலீசார் வீசினர்

    • ஜெயராஜ்-பென்னிங்ஸ் ஆகியோரின் உடல்களில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து போலீஸ் நிலையத்தின் சுவர்கள், தரை, அங்கிருந்த பொருட்களில் தெறித்துள்ளது.
    • போலீஸ் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தக்கறை தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார் கொலை வழக்குபதிவு செய்தனர். இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 2,027 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் சாட்சிகள் ஆஜராகி தங்களின் சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் 400 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் வழக்கு தொடர்பான பல புதிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிதாக 2 சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெண்ணிலா மற்றும் கோவில்பட்டி சிறையில் இருந்த கைதி ராஜாசிங் ஆகியோர் புதிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சி.பி.ஐ. புதிதாக தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் விவரம் வருமாறு:-

    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் 19-6-2020 அன்று மாலை காமராஜர் பஜாரில் இருந்து ஜெயராஜையும், பென்னிக்சையும் சட்டவிரோதமாக அழைத்துச்சென்று, அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

    கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பின் தந்தை-மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயராஜ்-பென்னிங்ஸ் ஆகியோரின் உடல்களில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து போலீஸ் நிலையத்தின் சுவர்கள், தரை, அங்கிருந்த பொருட்களில் தெறித்துள்ளது.

    படுகாயங்களால் அவதிப்பட்ட போதும் பென்னிக்ஸ் சுவர் தரைகளில் இருந்த ரத்தத்தை சுத்தப்படுத்துமாறு போலீசார் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு எதிராக ஒரு பொதுவான நோக்கத்துடன் குற்றவியல் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

    மேலும் போலீஸ் நிலையத்திலிருந்து தந்தை-மகனை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தும்போது ரத்தக்கறைகள் இருக்கக்கூடாது என்று கருதி ரத்தக்கறையுடன் இருந்த அவர்களின் உடைகளை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் இருவரின் ரத்தக்கறை படிந்த உடைகளை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் குப்பைத்தொட்டியில் வீசி உள்ளனர். சாத்தான்குளம் போலீஸ் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தக்கறை தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

    எனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மீதான குற்றசாட்டு உறுதியாகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை ஆகியோர் போலீஸ் நிலையத்தில் தந்தை-மகன் இருவரையும் துன்புறுத்தி உள்ளனர் என்பது விசாரணையில் உறுதியாக தெரியவந்துள்ளது.

    போலீஸ்காரர்கள் தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோரும் இறந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரை அநியாயமாக அடைத்து வைக்கும் நோக்கில் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×