search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்து முறைகேடு- அதிர்ச்சி தகவல்
    X

    தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்து முறைகேடு- அதிர்ச்சி தகவல்

    • 8 கூட்டுத்தொகை கொண்ட பதிவெண்களில் வாகனங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது
    • தமிழக அரசு, அனைத்து வட்டார போக்குவரத்து அலவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    சென்னை:

    பிஎஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்யும் முறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    நாடு முழுவதும் வாகனங்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2020ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. 2020 மார்ச் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்யலாம். அதன்பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 என்ற அதிக மாசு ஏற்படுத்தாத புதிய வகை வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனால், பிஎஸ்-4 வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்த நிறுவனங்கள், அந்த வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தன. அதன் பிறகு நூதன முறையில் முறைகேடாக குறைந்த விலையில் விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து துறையின் அனுமதி பெறாமல் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக 8 என்ற கூட்டுத்தொகை வரும் எண்ணை யாரும் விரும்பி பதிவு செய்வதில்லை. அந்த கூட்டுத்தொகை வரும் வாகன எண்களை வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் பேக்லாக் என்று தனியாக வைத்துவிடுவார்கள். அந்த எண்களை யாரும் கேட்காததால் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி, அந்த எண்களில் பிஎஸ்-4 வாகனங்களை முறைகேடாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மென்பொருள் நிறுவன முன்னாள் ஊழியர்கள் ஒரு சேர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் பகுதிகளில் அதிக அளவு பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்களை பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தணிக்கை செய்யும்போது 8 கூட்டுத்தொகை கொண்ட பதிவெண்களில் வாகனங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும், அதுபற்றி விசாரித்தபோதுதான், இந்த முறைகேடு தெரியவந்திருக்கிறது.

    இதையடுத்து தமிழக அரசு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பிஎஸ்-4 வகை வாகனங்கள் 8 கூட்டுத்தொகை வரும் எண்ணில் பதிவு செய்தவர்கள் யார்? விற்பனையாளர், வாங்கியவர், பதிவு தேதி உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் முழு விவரங்கள் கிடைக்கப்பெற்றதும், வாகன பதிவில் எத்தனை கோடி மோசடி நடந்துள்ளது? என்பது தெரியவரும்.

    தடை செய்யப்பட்ட பிஸ்-4 வாகனங்களை பதிவு செய்த இந்த முறைகேடு, தமிழகம் மட்டுமமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

    Next Story
    ×