search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு
    X

    அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு

    • இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
    • உண்ணாவிரத போராட்டத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

    கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

    இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இந்நிலையில், அ.தி.மு.க.வினர் தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

    இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுகவினரின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

    அந்த எக்ஸ் பதிவில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

    மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.

    இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சீமான் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×