search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காமராஜர் பிறந்தநாளை தேசிய திருவிழாவாக கொண்டாடுங்கள்- செல்வப்பெருந்தகை
    X

    காமராஜர் பிறந்தநாளை தேசிய திருவிழாவாக கொண்டாடுங்கள்- செல்வப்பெருந்தகை

    • ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.
    • தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவின் தென்கோடியில் உள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் வரை சென்று இந்திய குடியரசின் நிலைப்பாட்டிற்கு உதவியதை பெருந்தலைவர் காமராஜர் மேற்கொண்ட அரசியல் பயணத்தின் மிகப்பெரிய வெற்றியாக கூறலாம்.

    விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறைவாசம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர்ந்து 12 ஆண்டு காலம் பதவி வகித்து, 1954 முதல் 1963 வரை ஒன்பதரை ஆண்டுகாலம் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருமுறை பதவி வகித்து பண்டித நேரு மறைவிற்கு பிறகு மூன்று முறை பிரதமர்களை தேர்வு செய்து இந்திய வரலாற்றில் காலத்தால் அழியாத சரித்திர சாதனை படைத்தவர். பெருந்தலைவர் காமராஜருக்கு 122-வது ஆண்டு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் ஜூலை 15 அன்று கோலாகலமாக கொண்டாட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன்.

    அதிகம் படிக்காத, ஆதரவற்ற, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வாழ்வை துவக்கிய மிகமிக சாதாரண மனிதராக இருந்து இந்திய அரசியலில் அற்புதங்களை நிகழ்த்தியவர். தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற 1954 இல் ஆண்டு பட்ஜெட் தொகை ரூபாய் 27 கோடி. 1963 இல் பதவி விலகியபோது பட்ஜெட் தொகை ரூபாய் 120 கோடி. குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு தமிழகத்தில் சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியவர்.

    ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கு கிடைக்காத கல்வி என்ற சொத்தை வழங்க இலவச கல்வி திட்டம், மதிய உணவு திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், விவசாயத்தில் வளர்ச்சி, கிராமங்கள்தோறும் மின்சாரம் வழங்க மின் உற்பத்தி திட்டங்கள், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி மக்களுக்கே அதிகாரம் வழங்குதல், தொழிற்புரட்சி மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குதல், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு கண்டு பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.

    சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலங்களில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்வதாக தந்தை பெரியார், அன்றைய முதலமைச்சர் காமராஜரை பாராட்டியது இன்றைக்கும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது. 1961 இல் காரைக்குடியில் தந்தை பெரியார் மரண வாக்குமூலம் வழங்குவதைப் போல, 'காமராஜர் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராஜரை விட்டால் வேறு ஆளே சிக்காது. எனவே அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆதரியுங்கள்" என்று பகிரங்கமாக பேசியதை எவரும் மறந்திட இயலாது.

    தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரும், பெருந்தலைவரும் பிரிக்க முடியாத சக்தியாக இருந்ததை வரலாற்று ஏடுகள் மூலம் புரிந்து கொள்ளலாம். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப் போல பாராட்டுகளை பெற்ற பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி முறையை தான் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

    தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர். காமராஜரையும், காங்கிரசையும் பிரித்துப் பார்க்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் புகழை பாடுவதற்கு எல்லோரையும் விட நமக்கு அதிகப்படியான உரிமை இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் நமது இயக்கத்தின் உயிர் மூச்சாக இருப்பவர் காமராஜர்.

    எனவே, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் கருத்தரங்குகள், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஏழைப் பங்காளனாக இருந்து வேட்டி கட்டிய தமிழர் எவரும் நிகழ்த்தாத சாதனைகளை இந்திய அரசியலில் செய்து காட்டிய பெருந்தலைவரின் புகழை தமிழகம் முழுவதும் பரப்புகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் அவரது பிறந்தநாளை தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×