search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இயற்கை பானங்களை அதிகம் குடிக்க வேண்டும்: டாக்டர் ஆலோசனை
    X

    இயற்கை பானங்களை அதிகம் குடிக்க வேண்டும்: டாக்டர் ஆலோசனை

    • சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருப்பது வழக்கம். கால சூழல் மாற்றத்தால் வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இயல்பைவிட அதிகமாக வெப்பம் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, உடலில் சோர்வு, தலை சுற்றல், தலைவலி, கால்வலி போன்றவை ஏற்படும்.

    வெயில் அதிகமாக முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதாக தாக்கக்கூடும். உஷ்ணம் தாங்க முடியாமல் அவர்கள் சுயநினைவு இழக்க நேரிடும். உடலில் நீர் சத்து குறைந்து வலிப்பு ஏற்படக்கூடும்.

    சிலருக்கு வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்டோக்) பாதிப்பும் உண்டாகலாம். இந்த பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    தளர்வான ஆடைகள், பருத்தி உடைகளை அணிவதில் இருந்து தப்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை பிடித்தும், தொப்பி அணிந்தும் செல்லலாம். கட்டாயம் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருக்க வேண்டும்.

    தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். இதன் மூலம் நா வறட்சி, படபடப்பு, சோர்வு, உடல் அசதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், பழங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட ஜூஸ் பழ, வகைகளை சாப்பிடக்கூடாது.

    சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகம் கருப்பாக மாறிவிடும். அதனால் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் கிரீம் தடவி செல்ல வேண்டும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வியர்வை கட்டி, வேர்க்குரு போன்றவற்றை தடுக்க தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள் வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டல் உணவு நல்லதல்ல. பழைய கஞ்சி உடலுக்கு நல்லது. தற்போதைய சீசன் பழங்களை பருகலாம். தர்பூசணி, தயிர் சாதம், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றுபோக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்ப பக்கவாதம் சிலருக்கு உயிர் இழப்பையும் ஏற்படுத்தி விடும். எனவே வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.

    வெப்ப தாக்குதலால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×