search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார்- விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது ஒரு நபர் ஆணையம்
    X

    ஸ்மார்ட் திட்ட பணியை ஆய்வு செய்த ஆணைய தலைவர் டேவிதார் (கோப்பு படம்)

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார்- விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது ஒரு நபர் ஆணையம்

    • ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்ற நகரங்களில் விசாரணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி விதிப்படி செலவழிக்கப்பட்டதா? என ஆய்வு

    சென்னை:

    மத்திய அரசின் உதவியுடன் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் அந்தஸ்துக்கு உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த திட்டத்துக்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், மாநில அரசுகள் 50 சதவீதத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

    சென்னையை பொறுத்த வரை தி.நகர் பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டது. இதற்காக பாண்டி பஜார் பகுதிகளில் நடை பாதைகள் அகலப்படுத்தப்பட்டன. வாகனம் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டன. போக்குவரத்தும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்ட தி.நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

    அங்கு சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்கி நின்றது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

    தி.நகரில் மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" என்றார்.

    அதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தியது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகள் அதற்கான வழிகாட்டுதலுடன் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதா? இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அனுமதித்த மானியங்கள், வழிகாட்டு முறைப்படி செலவழிக்கப்பட்டதா? திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டதா? திட்ட அமலாக்கத்தில் ஏதாவது குறைகளை தணிக்கை துறை சுட்டிக் காட்டியுள்ளதா? அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா, தவறுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ஆகியவை பற்றி இந்த ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    மேலும் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளையும் ஒருநபர் ஆணைய தலைவர் டேவிதார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் அவர் அறிக்கை தயாரித்தார்.

    இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒருநபர் ஆணைய தலைவர் டேவிதார் தாக்கல் செய்தார். இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்குகிறார்கள்.

    Next Story
    ×