search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்: நவம்பர் மாதம் நடக்கிறது
    X

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்: நவம்பர் மாதம் நடக்கிறது

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும்.
    • வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையம் 29.5.2023 அன்று, 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 17-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு முகாம்கள் வருகிற நவம்பர் மாதம் 4, 5, 18, 19-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான தீர்வு வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.

    மேற்சொன்ன நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலங்களிலும், சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும், அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடமும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    1.1.2024, 1.4.2024, 1.7.2024, 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ-வை நேரில் அளிக்க வேண்டும் அல்லது அதிகாரிக்கு தபாலில் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    அதேபோல், நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபனைக்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கு படிவம் 7-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

    வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றுதல், நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், மாற்றுத்திறனாளிகளை குறிப்பது, மாற்று புகைப்பட அடையாள அட்டை பெறுவது ஆகியவற்று படிவம் 8-ல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×