search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
    X

                    ரவுடியை துணிச்சலாக சுட்டுப்பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்


    துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

    • போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான்.
    • ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.

    அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாககம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.

    கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.

    போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான். இதனால் உஷாரான போலீசார் "டேய் தப்பி ஓட நினைக்காதே... போலீஸ் விசாரணைக்கு எங்களோடு வந்து விடு. இல்லையென்றால் நடப்பதே வேறு" என்று எச்சரித்துள்ளனர்.

    ஆனால் ரோகித் ராஜோ, போலீசார் சொல்வதை கேட்காமல் தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தான். இதைத் தொடர்ந்து போலீஸ் ஏட்டுகள் சரவணகுமார், பிரதீப் இருவரும் ரவுடி ரோகித் ராஜை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது ரோகித் ராஜ் திடீரென தாக்குதலில் ஈடுபட்டான். மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினான். இதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

    இதில் நரம்பு துண்டிக்கப்படும் அளவுக்கு கொடுங்காயம் ஏற்பட்ட போதிலும் ஏட்டுகள் இருவரும் ரவுடி ரோகித்ராஜை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்து மல்லுக்கட்டினார்கள்.

    அப்போது அவர்களோடு கத்தியை வைத்துக் கொண்டே கட்டிப்புரண்டு சண்டை போட்ட ரோகித் ராஜ் போலீஸ் பிடியில் இருந்து நழுவி தப்பி ஓடினான்.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தனது துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ரவுடி ரோகித்ராஜின் பின்னால் ஓடினார். "ஓடாதே... நில்..." என்று அவர் எச்சரித்தார். ஆனால் ரவுடி ரோகித் ராஜோ போலீசில் சிக்கி விடக் கூடாது. தப்பி ஓடி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓட்டம் பிடித்தான். கல்லறை தோட்டத்துக்கு வெளியே உள்ள கல்லறை சாலையில் தலைதெறிக்க ஓடிய ரவுடி ரோகித்தை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

    ரவுடி ரோகித் ராஜை சுட்டுப் பிடிக்க முடிவு செய்த அவர் ரோகித்தை நோக்கி குறி பார்த்து சுட்டார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலையில் நடந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். டி.பி.சத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவுடி ரோகித் ராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரோகித் ராஜ் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். காலில் கட்டு போடப்பட்டு ரோகித்ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் இருவரும் கீழ்ப்பாக் கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு கடந்த மாதம் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    இந்த நிலையில் ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே என்கவுண்டர் பீதியில் தவிக்கும் ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×