search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம்  நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம்
    X

    நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம்

    • நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இடிந்தகரையை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

    நெல்லை:

    தமிழகத்திலேயே பாரம்பரிய நாட்டுப்படகு மூலம் மீன் பிடிக்கக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான்.

    இங்கு மீன்பிடி தங்குதளமோ, மீன்பிடித் துறைமுகமோ இல்லாததினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் தான் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்தது வந்தது.

    நேற்று முன்தினம் இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் படகில் இருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தத்தளித்துள்ளனர்.

    இதில் வினோத் மற்றும் அண்டன் ஆகிய 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இடிந்தகரையை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரை ஒட்டி 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து நாட்டுப் படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×