search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • 6 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • கோவில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள் , 85 நிலையான மருத்துவ குழுக்களும், 108 அவசர ஊர்தி 20 வாகனங்களும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    சித்ரா பவுர்ணமி நாளை (செவ்வாய்ழமை) அதிகாலையில் தொடங்கி, மறுநாள் (புதன்கிழமை) அதிகாலையில் நிறைவடைகிறது.

    இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    சித்ரா பவுர்ணமி நாளில் நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே போல் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் என 55 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த விழுப்புரம் மற்றும் வேலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்து தனியார் பஸ்கள் 20 மற்றும் 81 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    6 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கோவில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள் , 85 நிலையான மருத்துவ குழுக்களும், 108 அவசர ஊர்தி 20 வாகனங்களும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும்.

    2 டி.ஐ.ஜி. தலைமையில் 10 போலீஸ் சூப்பிரண்டுகள், 25 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் என 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்திற்குள் 140 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவல ப்பாதையில் 97 கண்காணிப்பு கேமராக்களும், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    மேலும் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் ஆகிய 4 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 1,800 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர். இணைய வழியில் அனுமதி பெற்ற 105 இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்கப்படும்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நகரில் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும். கிரிவலப்பாதையில் குடிநீர் வசதிகளும், 106 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகளும், 425 இடங்களில் நிரந்தர கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×