search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசாரை விரட்டி விரட்டி தாக்கிய பீகார் வாலிபர்கள் 28 பேர் கைது
    X

    அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசாரை விரட்டி விரட்டி தாக்கிய பீகார் வாலிபர்கள் 28 பேர் கைது

    • பீகார் வாலிபர்கள் ஏட்டு ரகுபதியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.
    • அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23-ந் தேதி ஆயுதபூஜை அன்று தனியார் நிறுவனம் ஒன்றில் பீகாரை சேர்ந்த வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் இருந்து ஏட்டு ரகுபதி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பீகார் வாலிபர்கள் ஏட்டு ரகுபதியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை 30-க்கும் மேற்பட்ட பீகார் வாலிபர்கள் சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். இதனால் ஏட்டு ரகுபதி அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போதும் பீகார் வாலிபர்கள் விரட்டி விரட்டி தாக்கினார்கள்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஏட்டு ரகுபதி வடமாநில தொழிலாளர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து ரோந்து வாகனத்தில் அங்கு சென்ற காவலர்களையும் பீகார் வாலிபர்கள் விரட்டி அடித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் கும்பலாக கூடி தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் பீகாரை சேர்ந்த 5 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்தனர். இதில் போலீசாரை தாக்கிய மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

    அவர்களை பிடிக்க நேற்று இரவு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான போட்டோக்களை வைத்து அறை எடுத்து தங்கியிருந்த பீகாரை சேர்ந்த 28 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த ராக்கி ராஜ், மனோஜ், கணேஷ், மதன் குமார், முகேஷ், சஞ்சய் குமார், சூரஜ்குமார், ராஜேஷ் பண்டித், ரஜ்வந்த், பிரேம் குமார், விகாஷ் குமார், ரவிக்குமார், கரன்ஜித் குமார், சங்கர் கேபட், சந்தன், உபேந்திரா, ஆஷிஸ், லட்சுமண் குமார், சகலதீப், குல்சன் குமார், அன்புராஜ், ராஜ்பிளம் குமார், கரு ரவிதாஸ், அனுஷ் சர்மா, அர்பிந்த் குமார், கவிதர், குட்டு பண்டிட், நந்தன் குமார், தனராஜ் குமார் ஆகிய 28 பேர் பிடிபட்டனர்.

    விடிய விடிய சோதனை நடத்தி இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் அம்பத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து விசாரணை நடத்தினர். 28 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    இவர்கள் மீது பீகாரில் குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அம்பத்தூர் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் பற்றிய தகவல்களை திரட்டி வரும் போலீசார் அவர்களின் பின்னணி குறித்த விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×