search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொள்ளையர்களை அரிவாளை கொண்டு விரட்டிய முதியவர்: பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 4 பேர் கைது
    X

    கொள்ளையர்களை அரிவாளை கொண்டு விரட்டிய முதியவர்: பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 4 பேர் கைது

    • மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர்.
    • அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 30). இவரது கணவர் சஞ்சய் காந்தி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சஞ்சய் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் ஜெயலட்சுமி குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு துணையாக அவரது மாமனார் வைரக்கண்ணு (82) வந்து தங்குவது வழக்கம்.

    இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் பின்பக்கம் வழியாக முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர். இதனை கண்ட அவரது மாமனார் வைரக்கண்ணு அதனை தடுக்க முயன்றார். அப்போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வைரக்கண்ணு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி வீசினார்.

    இதனால் பயந்த கொள்ளையர்கள் பெண்ணிடம் இருந்து பறித்த நகைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு அலறிஅடித்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர். ஆனால் அவர்கள் அதற்குள் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருவாரூர் சரவணன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எடையூர் ஆனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், புஷ்பநாதன் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதன் அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக திருத்துறைப்பூண்டி அடுத்த கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (26), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), விளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, கச்சனம் பகுதியை சேர்ந்த சினநேசன் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டில் புகுந்த கொள்ளையர்களை துணிச்சலுடன் அரிவாளை கொண்டு விரட்டிய முதியவரின் வீரதீர செயலை கண்டு அனைவரும் வியந்தனர். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×