search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருகம்பாக்கத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை
    X

    விருகம்பாக்கத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

    • புவனேஸ்வரன், நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு புனேவுக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை புவனேஸ்வரன் வீடு திரும்பினார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து புவனேஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரரா நகர் 1-வது தெரு விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் சுப்பிரமணியன். 61 வயதான இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.

    இவரது மனைவி பெயர் லட்சுமி. மகன் புவனேஸ்வரன். செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    அதிகாரி குமார் சுப்பிரமணியன் கடந்த 21-ந்தேதி மனைவி லட்சுமியுடன் வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் புவனேஸ்வரன், நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு புனேவுக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை புவனேஸ்வரன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து புவனேஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி புவனேஸ்வரன் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில் வீட்டின் பீரோவில் இருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பதாக கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    குமார் சுப்பிரமணியனின் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கிறார்கள். பழைய குற்றவாளிகள் யாரேனும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×