search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிதாக கட்டிய வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்சாரம் வழங்காததாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்
    X

    புதிதாக கட்டிய வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்சாரம் வழங்காததாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.
    • பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருக்கு சமரச செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு சமர செல்விக்கு சொந்தமான இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளார். வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019-ம் ஆண்டு மனு அளித்த நிலையில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

    பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்துள்ளார்.

    முருகனின் மூத்த மகள் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் நன்றாக படிக்கும் நிலையில் மகள் இருந்தும் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் நாங்கள் இருப்பதாக வேதனையுடன் முருகன் மற்றும் மனைவி, கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.

    இந்நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறியும் கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் தெரிவித்ததுடன் நேற்றைய தினம் வீட்டிற்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புடன் சமரச செல்வி தனது மகளையும் அழைத்துக் கொண்டு இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

    இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.

    தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்து வந்து கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    இது தொடர்பாக மின்சார துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீட்டுக்கு செல்வதற்கு வழிப்பாதை இல்லை. அங்கு மின்கம்பம் அமைப்பதற்கு அருகில் இருப்பவர்களிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின்கம்பம் அமைத்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளோம்.

    ஆனாலும் இதுவரை சான்று கிடைக்கவில்லை.இதனால் மின்சாரம் வழங்கும்பணி தாமதப்பட்டு வருகிறது என்றனர்.

    Next Story
    ×