search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Edappadi Palaniswami
    X

    அம்பாசமுத்திரத்தில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. 53-வது ஆண்டு விழா- முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் எடப்பாடி

    • கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முன்னதாக அவர் சேரன்மகாதேவியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அம்பையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் சமீப காலமாக அதிரடி முடிவுகளை எடுத்து வரும் எடப்படி பழனிசாமி, கட்சியை பலப்படுத்தவும், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்திலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கலாம் என்று கட்சி நிர்வாகிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    கட்சியின் பொதுக்குழுவை கூட்டுதல், உட்கட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி பணிகள் என பல முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி இந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டும் பணி, வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கும் பணியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×