search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருகிற 11, 12-ம் தேதி சசிகலா சுற்றுப்பயணம்
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருகிற 11, 12-ம் தேதி சசிகலா சுற்றுப்பயணம்

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

    சேலம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கருத்து எழுந்ததை தொடர்ந்து தலைமை பொறுப்பை கைப்பற்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி எழுந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக இருந்த நிலையில் அதன் பின்னர் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தது.

    தொடர்ந்து அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கடந்த ஜூன் மாதம் முதல் சட்டமன்ற வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் அடுத்த வாரம் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    தி.மு.க ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்தவும், பெண்ணினத்தின் உரிமைகளை நிலை நாட்டிடவும் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி நாளை (புதன்கிழமை) காலை தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றடைகிறார். அதன்பின் மறுநாள் வியாழக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டி, பாமணி என்கிற இடத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் காலை நடைபெற இருக்கின்ற மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார்.

    அதன் பின்னர் 11-ம் தேதி தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர், வீரகனூர் வழியாக தலைவாசல் சென்றடைந்து பிற்பகல் 2.30 மணியளவில் அங்கிருந்து தனது பயணத்தை மேற்கொள்கிறார்.

    சேலம் ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பஸ் நிலையம் அருகில், சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா, தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். அதன் பிறகு 12-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் அரியானூரிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    சேலம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சசிகலா அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு திண்டல் முருகன் கோவில் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    இந்த பயணத்தின்போது அ.தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளையும், இ.பி.எஸ். தரப்பு ஆதரவாளர்களையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மீது அருப்தியில் உள்ள சிலர் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி உள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.ல்.ஏ.க்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். ஒரு சில நிர்வாகிகள் ஓ.பி.எஸ். தரப்பிலும், சிலர் அ.ம.மு.க.விலும் உள்ளனர். ஓரிரு நிர்வாகிகள் சசிகலாவை சென்னையில் நேரடியாக சந்தித்து பேசி உள்ளார்கள். அவர்கள் மூலம் சேலத்தை தன்வசப்படுத்த சசிகலா திட்டுமிட்டுள்ளார். இதற்காக அ.தி.மு.க. செல்வாக்கு மிகுந்த பகுதிகளையே தனது சுற்றுப் பயணத்துக்கு தேர்வு செய்துள்ளார்.

    இந்த சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள். மேலும் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள சிலரை சசிகலாவை சந்தித்து பேச வைக்கவும் மறைமுக ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதி முன்னாள் அமைச்சர் தங்கமணியின் செல்வாக்கு மிகுந்த இடமாக கருதப்படுகிறது. ஏற்கனவே குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவர் தனது தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினரை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இங்கும் அதிருப்தியில் இருப்பவர்களை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×