search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்மட்டம் குறைவு எதிரொலி- பவானிசாகர் அணையில் தெரியும் டணாய்க்கன் கோட்டை
    X

    நீர்மட்டம் குறைவு எதிரொலி- பவானிசாகர் அணையில் தெரியும் டணாய்க்கன் கோட்டை

    • பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணை மீதும் நீர்த்தேக்க பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இன்னும் சில நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள் அணை கட்டுமான பணிக்கு முன்னதாக அப்பகுதியில் வசித்து வந்த மக்களின் வழிபாட்டுத் தலமாக திகழ்ந்தன.

    பணி தொடங்கிய போது நீர்த்தேக்க பகுதியில் வசித்த கிராம மக்கள் பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் குடியேறினர். கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து வந்து பவானிசாகரில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தனர்.

    கடந்த 1955-ம் ஆண்டு கட்டுமான பணிகள் முடிந்த பின் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபங்கள் அணை நீரில் மூழ்கின. காலப்போக்கில் சிதிலமடைய தொடங்கியது. அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறையும் போது டணாய்க்கன்கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும்.

    கடந்த 2018-ம் ஆண்டு நீர்மட்டம் குறைந்த போது இந்த கோவில்கள் வெளியே தெரிந்தன. அதன் பிறகு 6 ஆண்டுகளாக நீர்மட்டம் குறையாததால் கோவில்கள் தெரியவில்லை. தற்போது நீர்மட்டம் 46 அடியாக சரிந்துள்ளதால் டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில் முழுவதுமாக வெளியே தெரிகிறது.

    பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணை மீதும் நீர்த்தேக்க பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாதவராய பெருமாள் கோவிலுக்கு சிலர் பரிசல்களில் திருட்டுத்தனமாக சென்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அதை பதிவிட்டு உள்ளனர்.

    இன்னும் சிலர் அந்தப் பகுதியில் மது அருந்தியும் சென்று வருகின்றனர். இதைதொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அந்தப் பகுதியில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் தெரியும் டணாய்க்கன்கோட்டைக்கு பரிசல் மற்றும் எந்திர படகில் பார்வையாளர்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லை.

    அப்பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது. இதை மீறி சென்றால் பரிசல் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கையும் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இன்னும் சில நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

    Next Story
    ×