search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க.வினர் பாடை கட்டி போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு- 300 பேர் கைது
    X

    பா.ஜ.க.வினர் பாடை கட்டி போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு- 300 பேர் கைது

    • மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.
    • கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    மதுரை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 55 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதையொட்டி பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்களும் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.

    கள்ளச்சாராய சம்பவத்தில் 55 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதேபோல் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இருந்த போதிலும் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த சூழலில் கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்பட அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளூர் சிலை அருகே பா.ஜ.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் இறந்தவரை தூக்கி செல்லும் பாடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசை கண்டித்து சிலர் பாடையை எடுத்து வந்து போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜ்குமார், கருட கிருஷ்ணன், நவீன், வேல்முருகன், ஓம்சக்தி தனலட்சுமி, ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×