search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் அருகே 90 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து-சிறுமி உள்பட 2 பேர் காயம்
    X

    குன்னூர் அருகே 90 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து-சிறுமி உள்பட 2 பேர் காயம்

    • மரப்பாலம் அருகே சென்றபோது பனிமூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
    • அதிர்ஷ்டவசமாக கார் கவிழ்ந்தபோது கார்களின் 2 கதவுகளும் திறந்துள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 20 பேர் நாமக்கல் அருகே கொல்லிமலையில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேன் மற்றும் கார்களில் நேற்று இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அவர்களில் சந்தோஷ்குமார் (வயது 51) மற்றும் அவரது உறவுப்பெண் சந்தியா (14) ஆகியோர் ஒரு காரில் வந்தனர். கார் அதிகாலை 3 மணி அளவில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

    மரப்பாலம் அருகே சென்றபோது பனிமூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ்குமார் சிரமத்துடன் காரை ஓட்டிச் சென்றார். மரப்பாலம் என்ற இடத்தில் சென்றபோது கார் நிலைதடுமாறி ரோட்டோரம் இருந்த தடுப்பை தாண்டி பள்ளத்தில் பாய்ந்தது. 90 அடி ஆழ பள்ளத்தில் அந்த கார் கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக கார் கவிழ்ந்தபோது கார்களின் 2 கதவுகளும் திறந்துள்ளது. இதனால் சந்தோஷ்குமாரும், சந்தியாவும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். காரில் இருந்த அவர்கள் 2 பேரும் காயத்துடன் தப்பினர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து குன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளத்தில் விழுந்த காரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தற்போது விபத்து நடந்த இடம் அருகே உள்ள வளைவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் சுற்றுலா பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

    அடுத்தடுத்து அந்த பகுதியில் தொடர் விபத்துக்கள் நடந்து வருவதால் மலைப்பாதையில் வாகனங்களை மெதுவாக, பாதுகாப்புடன் இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×