search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    TN Govt
    X

    காவிரி நீர் விவகாரம்... அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
    • அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது

    சென்னை:

    காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்குவதை முறைப்படுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக மேற்கண்ட அமைப்புகள் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமலேயே இருந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகிய 2 அமைப்புகளும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கணக்கிட்டு கடந்த 12.7.2024 முதல் 31.7.2024 வரையில் நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. என்ற கணக்கில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.

    ஆனால் இதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்து விட்டது. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் அமைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதன்படி அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ் குமார், பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உரிய முடிவுகளை எடுத்து அதனை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×