search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை போலீஸ் டி.எஸ்.பி. எனக்கூறி பெண்ணை திருமணம் செய்ய முயற்சி- பத்திரிகையில் கம்பீரமாக பெயர் போட்ட கில்லாடி மாப்பிள்ளை
    X

    சென்னை போலீஸ் டி.எஸ்.பி. எனக்கூறி பெண்ணை திருமணம் செய்ய முயற்சி- பத்திரிகையில் கம்பீரமாக பெயர் போட்ட கில்லாடி மாப்பிள்ளை

    • சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் நமண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33).

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக இவருக்கு திருமணத்திற்காக பெண் தேடும் படலம் நடந்தது. ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் இவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

    வயது 33 ஆகிவிட்டதால் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என சந்தோஷ் குமார் முடிவு செய்தார். தனக்கு போலீசில் டி.எஸ்.பி. வேலை கிடைத்துள்ளதாக அந்த பகுதி பொதுமக்களிடம் கூறினார்.

    தற்போது சென்னையில் பயிற்சி டி.எஸ்.பி.யாக வேலை பார்த்து வருவதாக கூறி பெண் பார்க்க தொடங்கினார். இந்த நிலையில் செய்யார் பகுதியை சேர்ந்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    மாப்பிள்ளை சென்னையில் டி.எஸ்.பி. அரசு அதிகாரியாக வேலை பார்க்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார் என கூறி வரதட்சணையும் பேசியதாக கூறப்படுகிறது.

    சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.

    திருமண பத்திரிகையில் சந்தோஷ் குமார் காவல்துறை டி.எஸ்.பி (சென்னை) என கம்பீரமாக அச்சடித்தார். அந்த பத்திரிகைகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெண் வீட்டிற்கும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை என்பவருக்கு சந்தோஷ் குமார் டி.எஸ்.பி. இல்லை. அவர் மோசடி செய்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் என தகவல் கிடைத்தது.

    அப்பாதுரை இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் திருமண பத்திரிகையில் சென்னை காவல்துறை டி.எஸ்.பி என அச்சிடப்பட்டிருந்ததை வைத்து விசாரித்தனர்.

    இதில் அவர் சென்னை காவல்துறையில் பணிபுரியவில்லை என்பது உறுதியானது. போலீசார் சந்தோஷ் குமாரின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பொழுதுதான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் போலீஸ் டி.எஸ்.பி. என மோசடி செய்து திருமணம் செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரிப்பது குறித்து தகவல் அறிந்த சந்தோஷ்குமார் தலைமறைவானார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மாப்பிள்ளை மோசடி செய்தது தெரிய வந்ததால் பெண் வீட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    Next Story
    ×