search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நீங்கள் நலமா புதிய திட்டம் 6-ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    'நீங்கள் நலமா' புதிய திட்டம் 6-ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • புது மாவட்டங்கள் அறிவிக்கிறது பெரிசு அல்ல அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதுதான் மிக மிக முக்கியமானது.
    • 150-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்படும்.

    சென்னை:

    மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.114.48 கோடியில் 7 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் நாகை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மயிலாடுதுறை மன்னம் பந்தல் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இவற்றை திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    மண்மனத்துடன் நெல் மணமும் கலந்து வீசும் வண்டல் நிலமும் அழகும் வரலாற்று சிறப்பும் கொண்ட டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்கள் வழங்க கூடிய விழா மற்றும் மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழத்தஞ்சைக்கு உட்பட்ட இந்த 3 மாவட்டங்களில் மயிலாடுதுறை காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்க கூடிய மாவட்டம் புகழ்பெற்ற பழமையான கோவில்கள் பல நிறைந்திருக்க கூடிய மாவட்டம்.

    நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி 1½ ஆண்டுகளுக்குள் இந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிற பெருமை கிடைத்துள்ளது.

    புது மாவட்டங்கள் அறிவிக்கிறது பெரிசு அல்ல அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதுதான் மிக மிக முக்கியமானது.

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாவட்டத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க. ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் உங்கள் அரசான திராவிட மாடல் அரசும் இதை செய்திருக்கிறது.

    இன்றைய நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ரூ.655 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள், மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,652 பயனாளிகளுக்கு ரூ.143 கோடியே 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

    நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தையும் எளிமையாக்கி இன்று தொடங்கி வைத்துள்ளேன். தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலம் வழங்குவது இதுதான் முதல் முறை.

    இந்த விழாவில் இன்னும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

    150-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்படும். வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும் சென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கிலும் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி கிராமத்தில் நண்டாற்று குறுக்கிலும் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் ஒழுங்கிகள் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்படும்.

    இதுபோன்று மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மயிலாடுதுறை பார்க் அவென்யூ பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ரூ. 5 கோடியில் நூலகம் கட்டி முடிக்கப்படும்.

    எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கிற வகையில்தான் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். அதனால்தான் தி.மு.க. அரசு நம்மோட அரசு என்கிற அடிப்படை உணர்வு உள்ளது.

    தமிழ்நாட்டில் இருக்க கூடிய ஒவ்வொருவர் மனதிலும் அது உருவாகி உள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கிறது. அது மட்டுமா? விடியல் பயண திட்டம் மூலம் 445 கோடி முறை பயணித்து மாதந்தோறும் 888 ரூபாய் வரை சகோதரிகள் சேமிக்கிறார்கள்.

    முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் வயிறாற சாப்பிட்டு வளமான தலைமுறையாக உருவாகி வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் மூலம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் போய் சேருகிறது.

    2 ஆண்டுகளில் நான் முதல்வர் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். இல்லந்தேடி கல்வி திட்டம் மூலம் 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளி குழந்தைகள் பயன் அடைகிறார்கள். 2 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர்.


    2021 முதல் 2024 வரை பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 614 ஹெக்டேர் நிலங்களுக்கு ரூ.6 கோடியே 40 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இப்படி தமிழ்நாட்டில் வாழுகிற ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைய கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

    இந்த திட்டத்தோட பயன்கள் எல்லாம் உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்கு ஒரு புதிய திட்டத்தை வருகிற 6-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப் போகிறேன். அந்த திட்டத்தோட பெயர் "நீங்கள் நலமா?"

    இந்த நீங்கள் நலமா திட்டத்தின் மூலமாக முதலமைச்சரான நான் உள்பட அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் என பொதுமக்களான உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்கப் போகிறோம்.

    உங்களது கருத்துக்களின் அடிப்படையில் நமது அரசோட திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.

    முதற்கட்டமாக நலத் திட்டங்கள் பற்றியும், அடுத்த கட்டமாக அரசு துறைகளில் வழங்கப்படுகிற சேவைகள் பற்றியும், கருத்துக்கள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இப்படி ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை உருவாக்கி வருகிறோம். நிதி நெருக்கடி அதிகமாக இருக்கிற சூழ்நிலையிலும், எந்த மக்கள் நலப்பணி திட்டங்களையும் நாம் நிறுத்தவில்லை.

    ஏனென்றால் மக்கள் தொண்டு ஒன்றுதான் நம் ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஒரு டெல்டாகாரன் உணர்வோடு இந்த விழாவில் திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளேன்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போகிறவர்கள் நாங்கள் அல்ல. அப்படி வருகிறவர்கள் யார் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. அது யார் என்று உங்களுக்கு தெரியும்.

    இப்போது தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கப் போகிறார்கள். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறார் நமது பாரத பிரதமர். வரட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

    தமிழ்நாட்டுக்கு நன்மை செய்து விட்டு நாம் வைக்கிற நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு வரட்டும். அப்படி இல்லாமல் தமிழ்நாட்டு மக்களோட வரிப் பணமும், ஓட்டு மட்டும் போதும்னு வருகிறார்கள்.

    நாம் கேட்கிறது என்ன? சமீபத்தில் 2 இயற்கை பேரிடர்களை எதிர் கொண்டோம். அப்போது ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்து விட்டு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறாரா? இல்லை ஒரு ரூபாய் கூட சல்லி காசு கூட கொடுக்கவில்லை.

    தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டாங்களாம். ஆனால் தங்களது பதவி நாற்காலியை காப்பாற்றி கிட்டு அதுக்காக ஆதரவு கேட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இவர்களை பார்த்து ஏமாற மாட்டார்கள்.

    தமிழ்நாட்டு உரிமைக்காகவும், தமிழ்நாட்டு வளர்ச் சிக்காகவும் பாடுபட்டு கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசு பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×