என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்பட்டது.
- டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டன. ரொக்கப் பணம் வழங்கவில்லை.
அந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்களில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஆண்டு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, கரும்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுக்கான ரொக்கத் தொகை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறைப் பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் பெறாதோர் ஆகியோரைத் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.
இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை டி.யு.சி.எஸ். ரேசன் கடைக்கு நேரில் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
கடையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அடங்கிய பொருட்களை ஒரு பையில் போட்டு தயாராக வைத்திருந்தனர். அந்த பையுடன் கவரில் 1000 ரூபாய் பணம் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றையும் சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை வேலு எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. டோக்கன்களின் அடிப்படையில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்கள்.
வருகிற சனிக்கிழமைக்குள் (13-ந்தேதி) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அளிக்க கூட்டுறவு-உணவுத்துறை தீர்மானித்துள்ளது. அதாவது இன்று தொடங்கி 4 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்