search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களுடன் முதல்வர் முகாம்: கோவையில் 2 நாளில் 4,705 மனுக்கள் குவிந்தன
    X

    மக்களுடன் முதல்வர் முகாம்: கோவையில் 2 நாளில் 4,705 மனுக்கள் குவிந்தன

    • பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
    • பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

    கோவை:

    தமிழகத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான தொடக்க விழா கோவையில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி எஸ்.என்.ஆர் கல்லூரி, கருமத்தம் பட்டி கொங்கு வேளாளர் திருமண மண்டபம், பேரூர் ராமலிங்கஅடிகளார் அரங்கம், மலுமிச்சம்பட்டி திவ்யம் மகால் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது பொதுமக்கள் திரண்டுவந்து கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு சென்றனர். அந்த வகையில் மட்டும் 1026 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதுதவிர மற்ற அரசுத்துறைகள் தொடர்பான 1284 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன. அவை தற்போது முதல்வரின் முகவரி துறையின்கீழ் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாயிலாக கடந்த 18-ந்தேதி மட்டும் 2310 கோரிக்கை மனுக்கள் குவிந்து உள்ளன. அவை உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

    இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டலம் வடவள்ளி காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபம், வடக்கு மண்டலம் சரவணம்பட்டி சமுதாயக்கூடம், மத்திய மண்டலம் செம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளி, கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர் திருமண மண்டபம், பொள்ளாச்சி நகராட்சி மகால், காரமடை மேட்டுப்பாளையம் சிவன்புரம் காலனி கொங்கு மகால் மற்றும் அன்னூர், கிணத்துக்கடவு, ஆனைமலை டவுன் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இதில் பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதுதவிர முதல்வ ரின் முகவரி துறைக்கு வந்திருந்த 816 மனுக்களையும் சேர்த்து மொத்தம் 2396 கோரிக்கை மனுக்கள் வந்து சேர்ந்து உள்ளன.

    கோவை மாவட்டத்தில் கடந்த 18, 19-ந்தேதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில் மட்டும், பொதுமக்களிடம் இருந்து 4705 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 18-ந்தேதி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் 2310 கோரிக்கை மனுக்கள் கிடைக்கப்பெற்று உள்ளன. அதேபோல நேற்று நடந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு 2395 மனுக்களை அளித்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களின் வாயி =லாக 4705 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

    இதுதவிர் சிறப்பு முகாம்கள் நடக்கும் பகுதியில் இ-சேவை மையம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தேவையான ஆவணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு 13 அரசு துறைகளுடன் தொடர்புடைய 52 விதமான சேவைகளை உடனடியாக பெற இயலும். மேலும் பொது மக்கள் அளிக்கும் மனுக்களில் தகுதியான விண்ணப்பங்களுக்கு 30 நாட்களில் தீர்வு பெற்றுதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதிவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×