search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. ஒன்றிய செயலாளரின் காரில் ரூ.8½ லட்சம் பறிமுதல்
    X

    தி.மு.க. ஒன்றிய செயலாளரின் காரில் ரூ.8½ லட்சம் பறிமுதல்

    • குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
    • தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு நின்ற கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணனின் காரை தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.8 லட்சத்து 500 பணம் காரில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த பணம் ஓட்டுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா அல்லது என்ன நோக்கத்திற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க தனிப்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இருந்தனர்.

    அங்கு பணத்துடன் நின்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபரை பறக்கும் படை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து அன்னூர் போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர். பிடிபட்ட நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×