search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பேக்கரியில் குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் புழுக்கள்: வாடிக்கையாளர் அதிர்ச்சி
    X

    பேக்கரியில் குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் புழுக்கள்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

    • வாயில் வைத்த சில நொடிகளிலேயே குழந்தைகளுக்கு ஒரு மாதிரி இருந்ததால் உடனடியாக கேக்கை வெளியில் துப்பி விட்டனர்.
    • உணவு பாதுகாப்புத்துறையினர் கோத்தகிரி பகுதியில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால், தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கோத்தகிரி வெஸ்ட்புரூக் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் சம்பவத்தன்று தனது குழந்தைகளுடன் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்தார்.

    பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரது குழந்தைகள் சாப்பிடுவதற்கு கேக் கேட்டனர்.

    இதையடுத்து முனியம்மாள், கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரிக்கு சென்று கேக் வாங்கினார்.

    பின்னர் கேக்கை வாங்கி கொண்டு தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டிற்கு சென்றதும், வாங்கி வந்த பார்சலை பிரித்து குழந்தைகளுக்கு கேக்கை ஊட்டினார். குழந்தைகளும் கேக்கை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

    வாயில் வைத்த சில நொடிகளிலேயே குழந்தைகளுக்கு ஒரு மாதிரி இருந்ததால் உடனடியாக கேக்கை வெளியில் துப்பி விட்டனர்.

    இதையடுத்து முனியம்மாள் தான் வாங்கி வந்த கேக்கை எடுத்து பார்த்தார். அப்போது, கேக்கின் அடிபாகத்தில் பாசி பிடித்து படர்ந்து போய் இருந்தது.

    மேலும் அதில், இருந்து துர்நாற்றம் வந்ததுடன், புழுக்களும் அதிகளவில் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் அந்த கேக்கை எடுத்து கொண்டு தனது உறவினர்களுடன், கேக் வாங்கிய பேக்கரிக்கு சென்றார்.

    அங்கு சென்று கடை உரிமையாளரிடம் கேக்கை காண்பித்து இதில் புழுக்களாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இதை ஏன் விற்பனை செய்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு அவர், இதை கொடுத்து விட்டு புதிதாக கேக்கை வாங்கி செல்லுங்கள் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை யாரும் வரவில்லை.

    பல இடங்களில் இதுபோன்ற பழைய பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உணவு பாதுகாப்புத்துறையினர் கோத்தகிரி பகுதியில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×