search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி முன்பதிவு தீவிரம்: ஆம்னி பஸ்களில் 2 மடங்கு தாறுமாறாக உயர்ந்த கட்டணம்
    X

    தீபாவளி முன்பதிவு தீவிரம்: ஆம்னி பஸ்களில் 2 மடங்கு தாறுமாறாக உயர்ந்த கட்டணம்

    • சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான்.
    • அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ளது. பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவ்வாறு வெளியூர் செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் சென்று திரும்ப போக்குவரத்துக்காக விரிவான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

    வருகிற 28-ந்தேதி (திங்கள்) முதல் 30-ந்தேதி (புதன்) வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 11 ஆயிரத்து 200 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    28 சிறப்பு ரெயில்களையும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம்.

    அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் எச்சரிக்கும். ஆனாலும் இந்த கட்டண உயர்வு பண்டிகை காலங்களில் தடுக்க முடியாததாகவே இருக்கிறது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் 'ரெட் பஸ்' என்ற இணைய தளம் வழியாகத்தான் பெரும்பாலும் முன்பதிவு செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான். ஆனால் 29-ந்தேதி ரூ.2,110 முதல் ரூ.4,350 வரை. இதேபோல் கோவைக்கு ரூ.800 முதல் ரூ.1,040தான். ஆனால் 29-ந்தேதி ரூ.1,800 முதல் ரூ.3,470 வரை நிர்ணயித்துள்ளார்கள். இதே போல் தான் மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    இந்த கட்டண உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பற்றி புக்கிங் ஏஜெண்ட் ஒருவர் கூறியதாவது:-

    அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் சொன்னாலும் பஸ் உரிமையாளர் தரப்பில் இணையதள நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி நழுவி விடுவார்கள். ஆனால், உண்மையில் இணைய தள நிறுவனத்துக்கு பஸ் உரிமையாளர்கள் கொடுப்பது 10 சதவீத கமிஷன் மட்டும்தான். எனவே ஆதாரத்துடன் கட்டண உயர்வை நிரூபித்து நடவடிக்கை எடுப்பது சிரமம் தான் என்றனர்.

    டிக்கெட்டுக்கு அலைமோதுவது, கிடைத்தாலும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டியிருப்பது போன்ற சிரமங்களால் பொதுமக்களும் தங்கள் பயணத் திட்டங்கள் பற்றி மாற்றி யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    நண்பர்கள் சேர்ந்து வாடகைக்கு கார்களை அமர்த்தி ஊர்களுக்கு செல்வது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதுபற்றி டெம்போ வேன்கள் இயக்கும் ஒருவர் கூறியதாவது:-

    இங்கிருந்து நாகர்கோவில் வரை செல்ல ரூ.30 ஆயிரம் தான் வாடகை. 14 பேர் பயணிக்கலாம். இவர்கள் ஆம்னி பஸ்களில் சென்றால் 40 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

    மேலும் ஊருக்கு சென்ற பிறகும் ஒரு நாள் வாடகை ரூ.2,400 கொடுத்தால் வேனை தங்கள் வசம் வைத்து கொண்டு அங்குள்ள இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும். பின்னர் பண்டிகை முடிந்து ஊர் திரும்பலாம். இந்த ஆண்டு ஏராளமான வேன்கள் முன்பதிவு செய்யப்படுகிறது என்றார்.

    அதிலும் இப்போது 'ரெண்டல் கார்' வசதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது சாதாரண கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை கிடைக்கிறது. பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையை பொறுத்து எந்த ரக கார் வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள முடியும்.

    ஒரு நாள் வாடகை ரூ.1,800 முதல் ரூ.5 ஆயிரம் வரை கார்களை பொறுத்து வசூலிக்கிறார்கள். டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பணி செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டை போன்ற மூன்று முக்கிய ஆவணங்களின் ஒரிஜினலை கொடுத்துவிட்டு காரை எடுத்து ஓட்டி செல்லலாம். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கார் ஓட்ட தெரிந்தவர்கள் சொகுசான, வசதியான பயணத்துக்காக இந்த மாதிரி கார்களை முன்பதிவு செய்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இதை நடத்தும் தனியார் நிறுவனத்தினர் கூறினார்கள்.

    Next Story
    ×