search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எங்கள் கூட்டணி நிலைத்து நிற்கும்- துரை வைகோ
    X

    எங்கள் கூட்டணி நிலைத்து நிற்கும்- துரை வைகோ

    • மாநில பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • மத்திய, மாநில பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது.

    நெல்லை:

    நெல்லையில் இன்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மீக வகுப்பு தவறானது. பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி நடத்த யாரால் அனுமதிக்கப்பட்டது, எதனால் நடந்தது என்ற விசாரணையை பள்ளிக்கல்வித்துறை நடத்த வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு சனாதன கருத்துக்களை அனுமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக முதலமைச்ச ரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொண்டு வரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

    தமிழகத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவு பெரிய தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    நாங்குநேரி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்து வருவதற்கான புகார்கள் தொடர்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து தற்போது தமிழகத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தபடும். பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது.

    தேசிய கல்விக் கொள்கை சார்ந்தது தான் பி.எம். ஸ்ரீ திட்டமும். பா.ஜ.க.வை தவிர்த்த அனைத்து அரசியல் இயக்கங்களும் தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்ற நிலையோடு இருந்து வருகிறது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சி பெறுவதை வரவேற்கிறோம். பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. அதில் பல முரண்பாடுகள் உள்ளது.

    3 மொழி கற்றுக் கொள்வதில் என்ன தவறு என மத்திய அரசு கேட்பதை நாங்கள் ஆமோதிக்கிறோம். மூன்றாவது மொழி ஏன் ஹிந்தியாக, சமஸ்கிருதமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

    தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியருக்கு மேல் சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.249 கோடி வரவேண்டிய நிதி வரவில்லை. இந்த ஆண்டுக்கான நிதி ரூ.500 கோடிக்கு மேல் வரவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே நிதி நெருக்கடி உள்ளது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மாநில பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது.

    ம.தி.மு.க. என்பது தனி இயக்கம். எங்களது சித்தாந்தத்தின் படியே எங்களது தகவல்களை சொல்கிறோம். எங்களது கூட்டணி நிலைத்து நிற்கும். எங்களது கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ம.தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×