search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரூர் அருகே மீண்டும் மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
    X

    கரூர் அருகே மீண்டும் மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

    • அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அமலாக்கத்துறையினர் புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் கரூர் மல்லம்பாளையம் மணல் குவாரியில் இன்று சோதனை மேற்கொண்டனர்.

    இன்று காலை அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அவர்கள், அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் அங்கிருந்த பணம், பில் புத்தகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் மணல் குவாரியில் இருந்து, கடந்த மாத சோதனைக்கு பின்னர் இதுவரை அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்தும் அவர்கள் கணக்கிட்டனர்.

    இதற்காக பிரத்யேக தொழில்நுட்ப வல்லுனர்களையும் அவர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மணல் அள்ளப்பட்ட அளவை நவீன கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் இந்த மணல் குவாரி மூடப்பட்டது, தடையை மீறி யாரும் மணல் அள்ளாமல் இருப்பதற்காக, அகழிகள் வெட்டப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் மணல் அள்ளியதாக அமலாக்கத்துறையினருக்கு புகார்கள் சென்றது.

    இதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. அதை வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை காரணமாக கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×