search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்...
    X

    கோப்புப்படம்

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்...

    • கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
    • மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் துரையூர் நெசக்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்து உளவுத்துறைக்கு அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 876 சாராய வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×