search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொத்துக்காக 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் மூதாட்டி சிறை வைப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சொத்துக்காக 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் மூதாட்டி சிறை வைப்பு

    • சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து பராமரிப்பது போன்று இருந்து வந்துள்ளனர்.
    • மூதாட்டி பராமரிப்பு இன்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பழனித்துரை. இவரது மனைவி ஜெயம் (வயது 65). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ஜெயம் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு வீட்டுடன் உள்ள சொத்துகளும், வேறு இடங்களில் சில நிலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

    கணவரும் இறந்து விட்டார் வாரிசுகளும் இல்லாமல் மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து பராமரிப்பது போன்று இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியை பராமரித்து வந்த அவரது உறவினர் ஒருவர் ஜெயத்தை வீட்டில் வைத்து பூட்டி சிறை வைத்துள்ளார்.

    தொடர்ந்து, அவருக்கு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். இப்படியே நாட்கள் செல்ல செல்ல பூட்டிய வீட்டில் ஜன்னல் வெளிச்சத்தில் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல், உடம்பில் உடை கூட இல்லாமல், உடல் மெலிந்த நிலையில் தனிமையில் மூதாட்டி தவித்து வந்துள்ளார்.

    மேலும், அங்கேயே இயற்கை உபாதைகளை கழித்தும், அதே இடத்தில் உறங்கியும் பரிதவித்து வந்துள்ளார்.

    நாளடைவில் அந்த பகுதியை கடந்தாலே துர்நாற்றம் கடுமையாக வீசுவதாலும், ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டியை காப்பாற்றுவதற்காகவும் சிலர் அந்த மூதாட்டியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்:-

    தனியாக இருந்த மூதாட்டியின் சொத்துக்களை அபகரிப்பதற்காக, பராமரிப்பது போன்று நடித்து சுமார் 6 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்து தினமும் ஒரு வேலை உணவு மட்டுமே கொடுக்கின்றனர்.

    அதிலும் தற்போது எப்போதாவது தான் உணவு கொடுக்கின்றனர். மூதாட்டியின் இந்த நிலையை பார்த்து நாங்கள் மனவேதனையில் உள்ளோம் என்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    மூதாட்டி பராமரிப்பு இன்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    வாழ்க்கையின் இறுதி காலத்தில் துணை யாரும் இல்லாமல் வேதனையின் உச்சத்தில் தவித்த இந்த மூதாட்டிக்கு வந்த நிலைமை அக்கம் பக்கத்தினர் மட்டுமின்றி வீடியோவை காணும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை ததும்ப வைத்தது.

    Next Story
    ×