search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரண்டு வாரங்களில் கட்டணம் உயர்த்தப்படும்.. ஷாக் கொடுக்கும் மின் வாரியம்
    X

    இரண்டு வாரங்களில் கட்டணம் உயர்த்தப்படும்.. ஷாக் கொடுக்கும் மின் வாரியம்

    • மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு உள்ளதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
    • தமிழக சட்டசபை கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளதால் மின் கட்டணம் குறித்த அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை அப்போது அமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது.

    சென்னை:

    அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணம் 5 சதவீதம் உயரும் என தெரிகிறது. அதாவது யூனிட்டுக்கு 23 பைசா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் வினியோகம் செய்வது முதல், மின்சாரம் தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மின் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்த நிறுவனங்களின் வருவாய், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தற்போதைய நிலவரப்படி ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின் வாரியம் செயல்படுகிறது.

    இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது.

    இது தொடர்பான ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் அதாவது அடுத்த மாதம் (ஜூலை) மின் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளன.

    அதன்படி நடப்பாண்டில் ஏப்ரல் மாத பண வீக்க அளவான 4.83 சதவீதம் அளவுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

    அதன்படி இப்போது ரூ.4.60 ஆக இருக்கும் ஒரு யூனிட் மின்சார கட்டணம் இனிமேல் ரூ.4.83 ஆக உயரும் என தெரிகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இந்த கட்டண உயர்வு 5 சதவீதம் வரை அமல்படுத்தப்படும் என தெரிகிறது. இதன் மூலம் யூனிட்டுக்கு 23 பைசா வரை உயரும்.

    கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாநில அரசு நுகர்வோர்களுக்கான கட்டண உயர்வை மானியமாக ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை மாநில அரசு மானியம் தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.

    இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு உள்ளதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

    வழக்கம் போல வாரியத்தின் வரவு-செலவு விவரங்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. எனவே மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கவில்லை.

    தமிழக சட்டசபை கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளதால் மின் கட்டணம் குறித்த அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை அப்போது அமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×