search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்- விவசாயிகள் ஏமாற்றம்
    X

    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்- விவசாயிகள் ஏமாற்றம்

    • சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • நாளை விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்த வருடம் கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற நிலை ஏற்பட்டது. விவசாயிகள் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்று திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி நேற்று மாலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் படிப்படியாக அதிகரித்து திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் தற்போது தண்ணீர் திறந்தால் பிரச்சனை ஏற்படும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கீழ் பவானி பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாளை விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×