search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை
    X

    கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை

    • கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வருபவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது. இன்று காலையில் 3-வது நாளாக சோதனை நீடித்தது. இதுவரை கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமாக சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து அந்த 3 பேரையும் சுகாதார துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதா? கொசு உற்பத்தி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மாநகர பகுதியில் வழக்கத்தை விட தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் வழக்கமாக 30 முதல் 35 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தினசரி பாதிப்பு 40 முதல் 50 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×