search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் பக்தர்களை படத்தில் காணலாம்.

    இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    • திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
    • புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு தேவநாத சாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 5 மணி முதல் பொதுமக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர். முன்னதாக அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் திருவந்திபுரம் பகுதியில் திரண்டனர். பின்னர் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு சாலக்கரை இலுப்பை தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்தில் மதியம் வரை 3 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர்.

    இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவில் முன்பு அமைத்திருந்த நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷம் எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 150-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×